திருமலை: திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு தலா ஒரு இலவச லட்டு வழங்கப்படுவது வழக்கம். கோயிலுக்கு வெளியே உள்ள கவுண்டரில் ரூ.50க்கு, பக்தர்கள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம்.இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், தற்போது கூடுதல் லட்டுகளை வழங்க தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இலவச லட்டுடன் ரூ.50 கூடுதலாக செலுத்தி 2 லட்டுக்கள் மட்டும் பெற வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டாலும் பக்தர்களுக்கு போதிய அளவில் லட்டுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இடைத்தரகர்கள் கூடுதல் விலைக்கு லட்டுகளை விற்கின்றனர். லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர், தங்களை ஒப்பந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைப்பதால் பிற்காலத்தில் கிடைக்கக் கூடிய சலுகைகள் கிடைக்காது என கூறி, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.* ரூ.3.45 கோடி காணிக்கைதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 71,196 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,936 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். 29 அறைகளில் காத்திருந்து 16 மணி நேரம் தரிசனம் செய்தனர்.