கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது காவல் துறையின் வாகனத்தில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடைபெறும் கஞ்சா புழக்கம் குறித்து அதே பகுதியைச் விக்கி என்ற விக்னேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கேஷ், நாகராஜை கத்தியால் வெட்டினார். இதில் காயமடைந்த நாகராஜ் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் நெற்குன்றம் ஊராட்சி மன்ற 1 வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள் என்பவரது மகன் பிரபு என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் கடந்த 1ஆம் தேதி வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த விக்னேஷை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முறைப்படி கொரோனோ பரிசோதனை செய்ய பூதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கைதி விக்னேஷ் வாகனத்தில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், தப்பியோடிய விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM