சென்னை:
ஆளும் கட்சியை எதிர்த்தும், விமர்சித்தும் அரசியல் செய்வதுதான் எதிர்கட்சிகளின் வேலை. அந்த வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மட்டுமில்லாமல் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளும் முட்டி மோதுகின்றன.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியானது. அதே நேரம் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனியாக போட்டியிட்டது. அந்த கட்சி பெற்ற வாக்குகளால் 15 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.
எனவே ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அ.தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக ஓரம் கட்டிவிடவில்லை என்பது தெரியவந்தது.
ஜெயலலிதாவின் ஆளுமையும், தி.மு.க. எதிர்ப்பில் இருந்த உறுதியும்தான் அவர் இருக்கும் வரை அந்த கட்சிக்கு பலமாக இருந்தது.
அவரது மறைவுக்கு பிறகு தலைமை மீதான நம்பிக்கையின்மை மட்டுமே அந்த கட்சியை சறுக்க வைத்தது.
மீண்டும் தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தி கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தியே தீருவது என்ற தனது அஜென்டாவை நிறைவேற்றுவதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார்.
பா.ஜனதாவுக்கு எதிராக வரிந்து கட்டி தமிழகத்தில் வளர்ந்து விடாமல் தடுப்பதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வின் திட்டங்களை உடைத்து பா.ஜனதாவை வளர்ப்பதில் அண்ணாமலை தீவிரமாக உள்ளார்.
அதன்படி தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் அதிரடியாக செயல்படுகிறார். தி.மு.க.வின் கருத்துகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கிறார். மாவட்ட வாரியாக சென்று தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டி அடுத்த ஒரு மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்தப் போவதாக கெடு விதித்துள்ளார்.
தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மத்திய அரசு மீது அமைச்சர்கள் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உடனடியாக விளக்கம் அளிக்கிறார். தி.மு.க. மீதான இந்த எதிர்ப்பு அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர உதவும் என்று நம்புகிறார்கள்.
பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணியும் தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மூலம்தான் பா.ம.க.வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார். தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான் என்று கூறி வருகிறார்.
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டதாகவும் வளர்ச்சிக்கான, தொலைநோக்கு திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.
பா.ம.க. தமிழகத்துக்கான பல திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாகவும் ஒரு வாய்ப்பு தந்தால் தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.
ஆக, இந்த 3 கட்சிகளும் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் போட்டி போடுகின்றன. அதன்மூலம் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.