புதுடெல்லி: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கடந்த 3 மாதங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 0.53 சதவீதமாக இருந்த நோய்ப் பரவல் விகிதம் தற்போது 0.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதே காரணமாகும். குறிப்பாக தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது வருத்தமளிக்கிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன் இப்போதைய பரவலால் வீணாகிவிடக் கூடாது.
நம் நாட்டின் மொத்த பாதிப்பில் 3.13 சதவீதம் தமிழகத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அதை கருத்தில்கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த் தடுப்பு விதிகளை முழுமையாக கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல் உட்பட பல்வேறு நிலைகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
இதுதவிர கரோனா அறிகுறிகளை முறையாக கண்காணிப்பதுடன், அதனுடன் சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்வதும் முக்கியம். எனவே, மாநில அரசுகள் கரோனா விவகாரத்தில் தீவிர கண்காணிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.