லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஈன்ற கன்றுக்குட்டி ஒன்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் பல இடங்களில் தனது எருமைக்கன்றை தேடி அலைந்துள்ளார். இறுதியொல் அவர் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த சஹரான்பூரின் பீன்பூர் என்ற கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை கண்டறிந்தார்.
அந்த எருமைக்கன்று தன்னுடையது என்று சந்திரபால் உரிமைக்கொண்டாடியுள்ளார். ஆனால் சத்வீர் எருமை கன்றை தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சந்திரபால் பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளார். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரபால், ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் எருமையை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். மேலும் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார்.
இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டி.என்.ஏ. சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.