இந்திய – சீன எல்லையான நாபிதாங் பகுதியில் ஒரு பெண் தன்னை பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டுச் செல்ல மறுக்கிறார். தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.
லக்னோவைச் சேர்ந்த ‘ஹர்மிந்தர் கவுர்’, தான் பார்வதி தேவியின் அவதாரம் என்றும், கைலாச மலையில் வசிக்கும் சிவபெருமானை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி தடைசெய்யப்பட்ட நாபிதாங் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து வெளியேற மறுக்கிறார் என பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னை அந்த இடத்தில் இருந்து அழைத்துச் செல்ல முனைந்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் அப்பெண்ணை அகற்றச் சென்ற காவலர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் திரும்பியுள்ளனர்.
இது குறித்து பித்தோராகர் எஸ்.பி லோகேந்திர சிங் கூறுகையில்…
“பார்வதியின் அவதாரம் என்று கூறும் ஹர்மிந்தர் கவுர், மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என நினைக்கிறோம். அவரை தார்ச்சுலாவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு பெரிய குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளோம். அப்பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் வசிக்கிறார்.
15 நாள்களுக்கான பர்மிட் பெற்று அவர் தன் தாயுடன் கஞ்சி பகுதிக்குச் சென்றுள்ளார். கைலாஷ்-மானசரோவர் செல்லும் வழியில் கஞ்சி உள்ளது. அந்த பர்மிட், மே 25-ம் தேதியே காலாவதியாகிவிட்டது. இருந்தும் அவர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுக்கிறார்.
இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் என அடங்கிய மூன்று பேர் கொண்ட போலீஸ் குழு அந்தப் பெண்ணை தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து அழைத்து வரச் சென்று முடியாமல் திரும்பியுள்ளது. மருத்துவ பணியாளர்கள் உட்பட 12 பேர் கொண்ட பெரிய போலீஸ் குழுவை அனுப்பி அப்பெண்ணை மீட்க திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.