புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 1938ம் ஆண்டு ஜவகர்லால் நேரு, 5 ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனம். சுதந்திரத்திற்கு பிறகு இந்த நிறுவனம் காங்கிரசின் குரலாக ஒலித்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் இது மூடப்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம், 2010ம் ஆண்டு வாங்கியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்யாமல், ‘யங் இந்தியா’வுக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டதில் சோனியாவும், ராகுலும் ரூ.2,000 கோடி வரை ஆதாயம் ஆதாயம் அடைந்துள்ளதாக பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடமும் இது தொடர்பாக கடந்தாண்டு அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக சோனியா காந்தி ஜூன் 8ம் தேதியும், ராகுல் காந்தி ஜூன் 2ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருப்பதால் நேற்று முன்தினம் ராகுல் ஆஜராகவில்லை. ஜூன் 5ம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாக அமலாக்கத் துறைக்கு ராகுல் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுள்ள அமலாக்கத்துறை, வரும் 13ம் தேதி ஆஜராகும்படி நேற்று அவருக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பியது. வரும் 8ம் தேதி ஆஜராக இருந்த நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் விசாரணைக்கு ஆஜராவாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.