நியூயார்க்: பாகிஸ்தானின் இனப் படுகொலையை யாரும் மறக்க முடியாது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
சர்வதேச சட்ட விதிமீறல் விவகாரங்களில் நீதியை நிலைநாட்டுவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் பிரதிநிதி ஆமீர்கான் பேசும்போது, ‘‘காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த பகுதியை இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய பிரதிநிதி காஜல் பட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தியா குறித்து பொய்களை அள்ளி வீசியுள்ளார். அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. பாகிஸ்தானால் ஏவப்பட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் சிறுபான்மையினரை குறிவைத்து படுகொலை செய்து வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்), பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலையை யாரும் மறக்க முடியாது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இந்த இனப்படுகொலை குறித்து பாகிஸ்தான் இதுவரை சிறிய வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு காஜல் பட் பேசினார்.