புதுடெல்லி:‘பாடகர் சித்து மூஸ்சேவாலாவை கொலை செய்தது நாங்கள் தான்’ என்று, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பஞ்சாப் சட்டபேரவைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை மான் அறிவித்து வருகிறார். டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட தனது அமைச்சரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும், சிக்கன நடவடிக்கையாக முன்னாள் எம்எல்ஏ.க்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உளிட்ட முக்கிய பிரமுகர்கள் 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் கடந்த மாதம் 28ம் தேதி ரத்து செய்தார். அதன்படி, பிரபல பாடகர் சித்து மூஸ்சேவாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கப்பட்டது. ஆனால், மறுநாளே மான்சா மாவட்டத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த மூஸ்சேவாலாவை மர்ம கும்பல் சரமாரியாக சுட்டு கொன்றது. இந்த கொலை பின்னணியில் பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய், கனடாவில் வசித்து வரும் தாதா கோல்டி பிரார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாரன்ஸ் பிஸ்னோயை காவலில் எடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய ஆட்கள் தான் மூஸ்சேவாலாவை கொலை செய்தனர் என்ற திடுக்கிடும் தகவலை அவன் கூறியுள்ளான். டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘மூஸ்சேவாலாவுக்கும் எனக்கும் முன்பகை இருந்தது. அதனால், எனது ஆட்கள்தான் இந்த கொலையை செய்தனர். கனடாவில் இருக்கும் தாதா கோல்டி பிரார் தான் இந்த கொலைக்கான சதியை தீட்டி, நிறைவேற்றினார் என்று பிஸ்னோய் தெரிவித்தான். ஆனால், கொலையாளிகள் பெயரை அவன் தெரிவிக்கவில்லை. மேலும், கொலைக்கான முக்கிய காரணம் என்ன என்பது பற்றியும் கூறவில்லை,’’ என்றனர்.பிஸ்னோய் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.