சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாடாளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் மத சுதந்திரத்தில் தலையிடும் போக்கு குறித்து இந்த அறிக்கை தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டில் நிகழ்ந்த விதிமீறல்கள் பற்றித் தனி அத்தியாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க மத சுதந்திரம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது. மேலும், அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட குடி மக்கள் நிலை குறித்துப் பேசுவதற்கு வெளிநாட்டு அரசுக்கு உரிமை இல்லை என்றும் இந்தியா விமர்சித்திருந்தது.

அதனால், அமெரிக்கா தற்போது வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்துப் பேசப்பட்ட அத்தியாயத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் அரசின் அறிக்கைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள் மற்றும் சிறுபான்மை நிறுவனங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. இந்தியாவில் கொலை, தாக்குதல், மிரட்டல் எனச் சிறுபான்மை சமூகத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளது எனவும், பசுவதை, மாட்டிறைச்சி போன்றவற்றைக் காரணம் காட்டி இந்துக்கள் அல்லாதோர் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறையும் இதில் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்களில் அல்லது சமூக ஊடகங்களில் இந்துக்கள் அல்லது இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இந்து அல்லாதவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அறிக்கைக்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையையும் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளின் தவறான கருத்துகளையும் நாங்கள் கவனித்தோம். சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வாக்கு வங்கி அரசியல் நடைமுறையைப் பின்பற்றுகிறது. அதனால் அந்த அறிக்கைக்கான உள்ளீடுகள் அனைத்தும் பாரபட்சமான பார்வைகளின் அடிப்படையில் உள்ளது. எனவே, அத்தகைய மதிப்பீடு தவிர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.