BJP Karu Nagaran reply to ADMK Sellur Raju crow crowd comment: பா.ஜ.க.,வைக் காக்கா கூட்டம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ள நிலையில், இது விரட்டினால் ஒடுற காக்கா கூட்டம் இல்ல, ஒற்றுமையை வெளிப்படுத்தும் காக்கா கூட்டம் என கரு.நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க., தான் எதிர்க்கட்சி என அக்கட்சி தலைவர்கள் கூறிவருவது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டப்போது, “எங்களுடைய பார்வையில் நாங்க தான் எதிர்க்கட்சி, எப்பவுமே அ.தி.மு.க – தி.மு.க இடையே தான் போட்டி. அ.தி.மு.க.,வில் ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. 1000 பேர், 10000 பேர் என கூட்டத்தை திரட்டுவது பெரிய விஷயமல்ல. நாங்க காக்கா கூட்டம் அல்ல, கொள்கைக் கூட்டம். இரையைப் போட்ட காக்கா கூட்டம் கூடத் தான் செய்யும். இரை முடிந்தவுடன் காக்காக்கள் எல்லாம் பறந்துடும். அ.தி.மு.க அடிமட்ட வரை பரவியுள்ள கட்சி. தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட தயாரா? நான் சாவல் விடுறேன். 2016ல் நாங்க தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். ஒபிஎஸ்-இபிஎஸ் இதற்கு தயார். எந்தக் கட்சியாவது தயாரா என்று கூறினார்.
இது அ.தி.மு.க.,வின் கருத்தா என செய்தியாளர்கள் கேட்டப்போது, அ.தி.மு.க.,வின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
பின்னர், கூட்டணி கட்சியாக இருப்பதால் நான் எதுவும் சொல்லகூடாது. முதலில் எல்.முருகன் வந்தார். ஒரு வேல்-ஐ பிடித்தார். அவருக்கு ஒரு பதவி வந்தது. தமிழிசையும் சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுமாதிரி அண்ணாமலை பதவி கிடைப்பதற்காக இப்படி வேகமாக செயல்படலாம் என்று கூறினார்.
செல்லூர் ராஜூவின் கருத்துக்கள் குறித்து பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் கேட்டப்போது, செல்லூர் ராஜூவுக்கு காக்கா-வின் மகத்துவம் புரியாது. நம் மூதாதையர்கள் எல்லாரும் காக்காக்களாக இருப்பதால் தான், எல்லா சாமிகளையும் கும்பிடும் முன் காக்கைகளுக்கு சோறு வைத்துவிட்டு சாப்பிடுகிற ஊரில் இருக்கிறோம். பல கட்சிக்கு போயிட்டு வர்ற காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை. ’காக்கா கூட்டத்தப் பாருங்க, ஒண்ணா இருக்க கத்துக்கோங்க’ என்று கலைஞரின் பாடலை செல்லூர் ராஜூ மறந்துட்டாரு. விரட்டியவுன் ஓடுற கூட்டம் இல்ல பாஜக, ஒற்றுமைக் கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தைத் தரக்கூடிய கூட்டம் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க மீதான பொன்னையனின் தாக்குதல்; அ.தி.மு.க.,விற்குள் உள்ள அதிருப்தியின் வெளிப்பாடு
செல்லூர் ராஜூவின் தனித்து போட்டி சவால் குறித்து கேட்டப்போது, கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து தானே போட்டியிட்டோம், எங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியதற்காக அ.தி.மு.க.,வினர் வருத்தப்பட்டனர். பா.ஜ.க.,வை விட்டது பெரிய தப்பு என எடப்பாடியிடம் புகார் சொன்னார்கள் என்று கூறினார்.
அண்ணாமலை பதவிக்காக செயல்படுவதாக செல்லூர் ராஜூ கூறியது குறித்து கேட்டதற்கு, அண்ணாமலை பதவிக்காகத்தான் ஆசைப்படுறார். அதாவது 234 தொகுதிகளிலும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் வெற்றிப் பெற ஆசைப்படுகிறார் என்று பதிலளித்தார்.