புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சோனியா காந்தியின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா தனது உ.பி. சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
பிரியங்காவுக்கும் கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிரியங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ட்விட்டரில் நேற்று பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.