பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்திலுள்ள கொசாத் கிராமத்தில் மொசாத் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் `நமது பகுதியில் நில அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அபகரித்த நிலங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, கடந்த காலங்களில் மக்களை அச்சுறுத்தியதற்காகவும், கொன்றதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள்” என்று ஆறு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஆறுபேரில், 4 வதாக இடம்பெற்றிருந்த விஜய் சிங் (55) என்பவர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக விஜய் சிங், “எப்போதும் போல் எனது வீட்டின் முன்பகுதி வரண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கினார்கள். ஆனாலும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினேன்” எனக் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பட்டியலில் உள்ள ராவன் உதில் சிங், ராவன் கிருஷ்ணா சிங், சுதாமா சிங், கமல் சிங் மற்றும் பராஸ் சிங் ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக சிவான் எஸ்.பி சைலேஷ் குமார் சின்ஹா, “மொசாத் பெயர் தாங்கிய அந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார். அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள மொசாத் என்ற பெயர் இஸ்ரேலின் முதன்மையான உளவு அமைப்பின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.