புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிடுமாறு மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங்கிடம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ‘தனியார் நிறுவனங்களால் கிராமப்புறங்களில் விநியோக வலையமைப்பை நிர்வகிப்பது எளிதானது மற்றும் சாத்தியமில்லை. டெல்லி, மும்பை மற்றும் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் மிக உயர்ந்த அளவில் மின் கட்டணங்கள் விதிக்கப்பட்ட போதிலும் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. தனியார்மயமாக்கல் சேவைகள் அதன் தரத்திற்கு மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை, மேலும், ஒடிசாவில் தனியார்மயமாக்கலுக்கு முயற்சித்து இத்திட்டம் தோல்வியையே தழுவியது.
முக்கியத் துறைகளின் நல்ல நிர்வாகமும் மேலாண்மையும் அரசாங்கத்திடம் மட்டுமே இருக்க வேண்டும். மின்சார விநியோகம் அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை பட்டியலின் கீழ் வருகிறது, இது அந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மக்களுக்கு மறுக்கமுடியாத வகையில் நன்மையாக இருந்தால் மட்டுமே மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முடியும்.
காரைக்கால் பகுதியில் 33 மெகாவாட் எரிவாயு மின் நிலையத்தை இயக்குகிறது, இது புதுவையை தன்னிறைவு படுத்துகிறது. புதுச்சேரி மின்துறை நாட்டிலேயே தன்னிகரற்று லாபத்தில் இயங்கி வருகிறது. எனவே, புதுச்சேரியில் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
புதுச்சேரி மின்துறை, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.5.5-க்கு ஒன்றியத்திடம் இருந்து கொள்முதல் செய்து, யூனிட் ஒன்றுக்கு சுமார் ரூ.6-க்கு விற்கிறது. புதுச்சேரிக்கு 450 மெகாவாட் மின்சாரம் அனுப்பப்படுகிறது. தனியார் மயமாக்கப்பட்டால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.10 அல்லது ரூ.11 வரை உயர வாய்ப்புகள் உள்ளன. ஒடிசா போன்ற பிற மாநிலங்களில் மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டதால், இயற்கை சீற்றங்களின் போது தனியார் நிறுவனம் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறி மின்சாரம் வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
முற்போக்கான புதுச்சேரி அரசின் மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது, அதன் முன்னேற்றத்திற்கு மேலும் எப்படி உதவப் போகிறது? புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.