தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத் தட்டு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் தொடர்பாக இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு கைவினைப் பொருள்கள் மற்றும் இரண்டு இசைக் கருவிகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இப்புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் சிறப்பை பொதுமக்கள் அறியும் வகையிலும் அவற்றிற்குரிய சந்தையை உருவாக்கும் வகையிலும் தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தில் இரண்டு நாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு்ளளது.

இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதனை் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் கலைத் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் நெட்டி வேலை, சுவாமிமலை ஐம்பொன் சிலை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு, கலம்காரி ஓவியம் ஆகிய கைவினைப் பொருட்களும், தஞ்சாவூர் வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகிய இசைக் கருவிகளும் இதுவரை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 40 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது தஞ்சை மாவட்டத்திற்கும், மாவட்ட மக்களுக்கும் பெருமைக்குரியதாகும்.

இப்புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் சிறப்பை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவற்றை சந்தைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் சமீபத்தில் பாரத பிரதமர் பாராட்டிய சுய உதவி குழுக்களின் தஞ்சை தாரகைகள் பொருள்கள் விற்பனையகம் ஒன்றாகும். இதுபோன்ற கண்காசட்சி அமைப்பதன் மூலம் இப்பொருள்கள் மக்களிடையே சென்றடையும். அதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். இதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்று கூறியுள்ளார்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்