கோர்பேவேக்ஸ் (Corbevax) கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மூன்றாவது டோஸாக கோர்பேவேக்ஸ் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்திருப்பதாக கோர்பேவேக்ஸ் தயாரிப்பாளரான பயாலஜிகல்-ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DGCI) ஒப்புதல் கிடைத்து உள்ளதாக பயாலஜிகல்-ஈ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா தட்லா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோர்பேவேக்ஸ் விலை சமீபத்தில் 250 ரூபாயாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த தடுப்பூசியின் விலை 840 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு இந்த தடுப்பூசியை 145 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.
கோர்பேவேக்ஸ் ஆரம்பத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
– கணபதி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM