ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசால் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் பல இடங்களில் ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.
விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் மாணவச் செல்வங்கள் உயர் படிப்புகளில் சேர்வதிலும் தேவையற்ற தாமதம் ஏற்படும். கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய குளறுபடிகள் நல்லதல்ல.
இனியாவது ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளால் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் செய்திக்குறிப்பில், “குறிப்பாக வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரிலேயே தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
இதேபோல டெல்டாவின் மற்ற பல இடங்களிலும் தூர்வாரும் பணி முழுமையடையவில்லை. எனவே, தூர்வாருதலில் பெரிய அளவு முறைகேடு நடந்திருக்கலாம் என மக்களிடம் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து விரிவான விளக்கத்தை தி.மு.க அரசு அளிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.