பாகூர்: ஷோரூம் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
கிருமாம்பாக்கம் புதுதெருவைச் சேர்ந்தவர் நேசமணி மகன் நேவிராஜ், 22; தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். கிருமாம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த புகழ் (எ) புகழேந்திக்கு, மாத தவணையில், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக் வாங்கி கொடுத்துள்ளார். இரண்டு மாதம் தவணை பணம் கட்டிய புகழேந்தி, அதன் பிறகு செலுத்தவில்லை.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன், புகழேந்தி, கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று விட்டார். அவர் பயன்படுத்திய அப்பாச்சி பைக்கை, கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த திருக்குமரன், வசந்த் ஆகிய இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர். மாத தவணை கட்ட தவறியதால், பைக்கை பறிமுதல் செய்ய சென்ற அகஸ்டீன் என்பவருக்கு, நேவிராஜ் உதவியாக இருந்துள்ளார்.
இதனால், வசந்த், திருகுமரன் ஆகியோர் நேவிராஜ் மீது கோபமாக இருந்துள்ளனர். கடந்த 1ம் தேதி, நேவிராஜ் கிருமாம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்த திருக்குமரன், வசந்த் இருவரும், நேவிராஜை காட்டிக் கொடுத்த துரோகி என்று கூறி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.
காயமடைந்த நேவிராஜ் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடுகின்றனர்.
Advertisement