அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றும் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று கடுமையாக விமர்சித்து பேசியது அவருடைய சொந்த கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று கூறினார். மேலும், பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக மீதான பொன்னையனின் இந்த விமர்சனம் பாஜகவினர் மத்தியிலும் அதிமுகவினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது ஓ.பி.எஸ், பாஜக குறித்து பொன்னையனின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அமைப்பு செயலாளர் பொன்னையனின் கருத்து அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என கூறினார். இப்பேட்டியின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தார். இதனால் பொன்னையனின் கருத்தில் இருந்து அதிமுக தலைமை விலகி நிற்கிறது என்பதை தெரிவித்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்கள் சிவி.சன்முகம், ஆர் தர்மர் ஆகியோர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வெற்றிக்குத் துணை நின்ற அதிமுக எம்எல்ஏக்கள், பாமக, பாஜக ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக சட்டசபையில் எப்படிச் செயல்படுகிறது என்று செய்தித்தாள், டிவி பார்த்தால் தெரியும். இது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வி.பி. துரைசாமி சான்றளிக்கத் தேவையில்லை. நாட்டு மக்களின் பிரச்சினையை நானும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறி வருகிறோம். அதோடு, பாஜகவின் சட்டசபை கட்சித் தலைவர் எப்படிப் பேசுகிறார் என்று நாட்டு மக்களுக்கும் தெரியும்.
ரெய்டுக்கு எல்லாம் அதிமுகவினர் அஞ்ச மாட்டோம். வி.பி. துரைசாமி எங்கு இருந்து எங்குச் சென்றார் என அனைவருக்கும் தெரியும். நான் 1977 முதல் 48 ஆண்டுகளாக நான் ஒரே இயக்கத்தில் இருந்து வருகிறேன். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அப்படி தான். அவரை போலக் கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாகக் கூறினார்.
சட்ட ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய இ.பி.எஸ் “டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறி இருந்தார். அன்றைய தினமே சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்பான செய்தி ஊடகத்தில் வெளியாகி இருந்தன. அதோடு போலீசாரின் ஒத்துழைப்போடு தான் குற்றவாளிகள் தலைமறைவு ஆவதாக மதுரை உயர் நீதிமன்றமே கருத்து கூறி உள்ளது. அந்த அளவுக்குத் தான் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இருந்து வருகிறது.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இத்துடன் வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஏரளமான கொலைகள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாத திறமையில்லாத அரசைத் தான் பார்க்கிறோம். திமுக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டுப் பாலியல் பலாத்காரம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த துறையை முறையாகக் கவனிக்கவில்லை. இதனால், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுச் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே போலீஸ் நடவடிக்கையில் தலையிட்டு, குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. அவர்களால் சந்திரமாகச் செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. கஞ்சா விற்பனை போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கஞ்சா விற்பனை நடைபெறாத இடமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. கிராமங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை தொடர்கிறது. அதையும் அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆளும் கட்சியினர் கஞ்சா வியாபாரிகளுக்குத் துணை நிற்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் தமிழ்நாடு கஞ்சா மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுந்துள்ளது” என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“