மாநில சட்டப்பேரவைகளில் பெரும்பான்மை கோரும்போது கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாநிலங்களவை தேர்தலுக்கும் தொற்றிக் கொண்டுள்ளன.
சட்டப்பேரவைகளில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஒவ்வொரு வாக்கும் முக்கியம். இதற்காக கட்சிகள் கையாளும் முறைதான்… எம்எல்ஏக்களை நாடு கடத்தும், மன்னிக்கவும்… மாநிலம் கடத்தும் நடைமுறை. இதில் நட்சத்திர ஹோட்டல்கள் பாடு கொண்டாட்டம்.. எம்எல்ஏக்களுக்கும்தான். வாக்கெடுப்பு நாள் அறிவிக்கப்பட்டதும் எம்எல்ஏக்கள் மூட்டை முடிச்சுகள் ஏதுமின்றி வீடு, மனைவி, மக்கள், அதாவது தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் என அனைத்தையும் மறந்து ஹோட்டல் நீச்சல் குளத்தில் ஐக்கியமாகி விடுவர். இதற்கு தமிழகத்திலும் கூவத்தூர் உதாரணம் உள்ளது.
மற்றபடி, ராஜஸ்தான், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ஜாலியான மாநிலமான கோவா உள்பட பல மாநிலங்கள் இதற்குப் பிரபலம். சட்டப்பேரவைகளில் குழப்பத்தின்போது மட்டுமே சில கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த இந்த சொகுசு வாழ்க்கை அதிர்ஷ்டம், தற்போது மாநிலங்களவைத் தேர்தலுக்கும் அடிக்கத் தொடங்கியிருக்கிறது.
வருகிற 10ஆம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பைத் தாண்டி அதிருப்தி வேட்பாளர்கள் களம் காண்பதும் எதிர்க்கட்சிகளின் எம்.பி. பலத்தைக் குறைத்துவிட பாஜக அவர்களை ஆதரிப்பதும் நடக்கிறது.
இதனால், கட்சி மாறி ஓட்டு போட்டுவிட மூளைச்சலவைக்கு ஆளாகி விடக்கூடாது எனக் கருதி ராஜஸ்தான் காங்கிரஸ், தனது எம்எல்ஏக்களை ஹோட்டலில் தங்க வைக்கிறது. இதேநிலை மகாராஷ்டிராவின் ஆளும்கட்சியான சிவசேனாவுக்கும். அக்கட்சி எம்எல்ஏக்களுக்கு, அருகிலேயே இருக்கவே இருக்கிறது கோவா! 10ஆம் தேதி வாக்களிக்க நேராக பேரவைக்கு அழைத்து வரப்படும் வரை எம்எல்ஏக்களுக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். ஆனால், மக்களாட்சியில் இது ஜனநாயகத்திற்கு திண்டாட்டம் என்பதை மறந்து விட முடியாது!
– பாஸ்கரன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM