மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த விவகாரம்: விதிகளை திருத்திய டிஜிசிஏ

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் அடைய, நாட்டின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, விமான பயண விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதில், மாற்றுத்திறனாளி பயணிகள் விமானத்தில் பயண மேற்கொள்வதற்கான உடற்தகுதி இருக்கிறதா என்பது குறித்து மருத்துவ கருத்தை பெறாமல், அவர்களுக்கு அனுமதி மறுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், ராஞ்சி விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறப்புத் திறன் கொண்ட குழந்தை விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என விமான நிறுவனம் தரப்பில் கூறியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய டிஜிசிஏ, இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்ட விதம் கண்ணியக்குறைவானது எனக் கூறி அந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.

மேலும், மாற்றுத்திறனாளி நபர்கள் அல்லது குறைந்த திறன் கொண்டவர்களுக்காக விதிமுறைகளில் டிசிஜிஏ திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதாவது, மாற்றுத்திறனாளி என்பதை காரணம் காட்டி எந்தவொரு பயணிக்கும் விமான நிறுவனம் அனுமதி மறுக்கமுடியாது. ஒருவேளை, அந்த பயணி விமான பயணம் மேற்கொள்வதால் உடல்நிலை மோசமடையக்கூடும் என உணர்ந்தால், பயணியை மருத்துவரை வைத்து பரிசோதனை செய்து, அவரது உடல்நிலை விமான பயணத்திற்கு தகுதியாக இருக்கிறதா என்கிற கருத்தை பெற வேண்டும். அதன்பிறகே, விமான நிறுவனம் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற அனுமதி மறுக்கும் முடிவை எடுப்பதற்கு முன், பயணிகளின் உடல்நலம் குறித்து விமான நிலைய மருத்துவரிடம் எழுத்துப்பூர்வ கருத்தை விமான நிறுவனங்கள் கட்டாயம் பெற வேண்டும்.

இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்த டிசிஜிஏ, இச்சம்பவத்தின் போது விமானத்தின் தரைப் பணியாளர்கள் இரக்கத்துடன் செயல்பட்டிருந்தால் பிரச்னையை தவிர்த்திருக்க முடியும். ஆனால், நிலைமை இறுதியில் மோசமானது என குறிப்பிட்டிருந்தது.

இண்டிகோ நிறுவனம் தரப்பில், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு சிறப்பாகச் சேவை செய்வது எப்படி என்பது குறித்த நிறுவனத்திற்குள் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.