பாங்காக்:மியான்மரில், ராணுவத்தினர் மூன்று கிராமங்களில் உள்ள, 200க்கும் மேற்பட்ட வீடுகளை தீயிட்டு எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு துவக்கத்தில் ராணுவத்தினர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் ராணுவ அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட துவங்கினர்.
போராட்டம்
இந்த போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவ அரசு நசுக்கியது. எனினும், மியான்மரின் வடக்கில் உள்ள சகாய்ங் பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டத்தை ராணுவத்தால் அடக்க முடியவில்லை. அங்குள்ள மக்கள் பாதுகாப்பு படையினருக்கும், ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில், சகாய்ங் பிராந்தியத்தின் கின், அப்பர் கின், கி டாங் ஆகிய மூன்று கிராமங்களில் ராணுவத்தினர் அதிரடியாக புகுந்துஉள்ளனர். மூன்று நாட்களாக அங்குள்ள நுாற்றுக்கணக்கான வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர்.வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியேறிய மக்களை அச்சுறுத்தும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
கிராம மக்கள் ஆற்றை கடக்க பயன்படுத்தும் படகுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக, பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்து உள்ளார்.
பயங்கரவாதிகள்
அமெரிக்காவின் ‘நாசா’ செயற்கைக்கோள், கி டாங், கின் கிராமங்களில் வீடுகள் தீயில் எரிவதை படம் பிடித்துள்ளது. இதற்கிடையே, வீடுகளை ராணுவத்தினர் தீயிட்டு எரித்ததை மியான்மர் அரசின் தலைவர் மின் ஆங் ஹலங் மறுத்துஉள்ளார். அது, மக்கள் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisement