மீண்டும் வந்த ஆண்டவர் : கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சி
கமல்ஹாசன் நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் 'பாபநாசம்'. அந்தப் படம் வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தூங்காவனம், விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.
ஏழு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்திருக்கும் படம் 'விக்ரம்'. நேற்று வெளிவந்த இப்படத்திற்கான வரவேற்பும் விமர்சனமும் சிறப்பாக இருக்கிறது. நாளை வரை பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 கோடி வசூலை இப்படம் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 200 கோடி வசூலைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தில் ஆக்ஷன் மட்டும் இல்லாமல், அப்பா மகன் சென்டிமென்ட், தாத்தா பேரன் சென்டிமென்ட் ஆகியவையும் இருப்பதால் குடும்பத்தினரும் வந்து படத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது. லோகேஷ் கனகராஜ், அனிருத் என இளம் கூட்டணியினருடன் கமல்ஹாசன் வைத்த சரியான கூட்டணிதான் இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். பகத் பாசில், விஜய் சேதுபதி என நல்ல திறமைசாலிகளையும் தனக்குத் தோள் கொடுக்குமாறு கமல்ஹாசன் தேர்வு செய்ததும் மற்றொரு காரணம் என்கிறார்கள்.
அரசியலில் கூட்டணி வைக்க கமல்ஹாசன் தயங்கினாலும், சினிமாவில் அவர் வைத்த கூட்டணி காரணமாக மீண்டு வந்துள்ளார் என்பது அவருடைய ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இப்படியே வெற்றிப் படங்களாக எடுத்துக் கொண்டு சினிமாவில் கவனம் செலுத்துங்கள், அரசியல் எல்லாம் வேண்டாம் என்கிறார்கள் கமல்ஹாசன் எதிர்ப்பாளர்கள்.