மும்பையில் கொரோனா 4-வது அலைக்கு வாய்ப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மும்பை :

மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாகும். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.

கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர். அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும்போது 4-வது அலை வரும் வாய்ப்பை மறுத்து விட முடியாது.

4-வது அலை மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மும்பையில் தற்போது 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பாதிப்பு விகிதம் 8 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது எச்சரிக்கை மணியாகும். எனவே கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் தொற்று பாதித்த கட்டிடங்களில் பெரிய அளவில் பரிசோதனை செய்ய வேண்டும். தினமும் 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்க கூடாது. தினமும் முதலில் பரிசோதனை அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விதிமுறையை மீறும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்…இலங்கைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கியது இந்தியா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.