மும்பை: மும்பையில் 4-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு உள்ளதால் தினமும் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் மும்பை, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் மீண்டு கொரோனா தொற்று அதிகாரித்துள்ளது. குறிப்பாக மும்பையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.நேற்று ஒரே நாளில் 750-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 3,740-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அவசர ஆலோசனைக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மும்பை மாநகராட்சி, கொரோனாவின் 4-வது அலை வரும் ஜூலை மாதம் ஏற்படலாம் என்று கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.சமீப நாட்களில் மராட்டியத்தில் கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும்போது 4-வது அலை வரும் வாய்ப்பை மறுக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-வது அலை மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவ வாய்ப்பிருப்பதால் சுகாதரத்துறை அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மும்பையில் தற்போது தினமும் 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை 30 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள மும்பை மாநகராட்சி பரிசோதனை அறிக்கையை முதலில் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.