food for sugar patients in tamil: நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களது உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமான ஒன்றாகும். அவர்கள் கடைபிடிக்கும் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சினால் நீரிழிவு நோயை தடுக்கலாம். மேலும் இவை அவ்வகையான நோயை எதிர்த்துபோராடவும் உதவுகிறது.
நீரிழிவு நோய் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி இருக்கிறது. இதேபோல், காய்கறி வகைகளில் முருங்கைக்கீரை முக்கியமானதாக இருக்கிறது. முருங்கைக்கீரையில் தயார் செய்யப்படும் கூட்டு, சூப், கறி போன்றவற்றை அன்றாட உணவுகளுடன் சேர்த்தால் மிகவும் நல்லது என உணவில் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படியாக மருத்துவ குணம் நிறைந்த முருங்கைக்கீரையுடன் சேர்த்து எப்படி சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முருங்கை கீரை சப்பாத்தி தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
சப்பாத்தி மாவு – 1 கப்
முருங்கை கீரை – 1/4 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 5
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
முருங்கை கீரை சப்பாத்தி சிம்பிள் செய்முறை
முதலில் வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி நன்றாக தேய்த்துக்கொள்ளவும்.
பின்னர், தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி மாவை தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான முருங்கைக் கீரை சப்பாத்தி தயார்.