மாஸ்கோ:”சர்வதேச சந்தையில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் தான் காரணம்,” என, அந்நாட்டு அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியை ரஷ்யா தடுப்பதாக உக்ரைன் அரசு புகார் கூறியுள்ளது. இது குறித்து ரஷ்ய ‘டிவி’யில் அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது:உலகளவில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளும் ஒரு காரணம். இதனால் உணவு தானிய உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தவறான கொள்கையை பின்பற்றி பாரம்பரிய எரிபொருளுக்கு மாற்றாக மரபு சாரா எரிசக்தி துறையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.இது போன்ற செயல்பாடுகளால் தான் சர்வதேச அளவில் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்த உண்மையை மறைத்து உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுப்பதால், விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு நாடுகள் அவற்றின் பிரச்னைக்கு ரஷ்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன. இதனை நிறுத்த வேண்டும்.
ரஷ்ய கடல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றினால், உணவு தானிய கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாது என உறுதி அளிக்கிறேன். உக்ரைன் நாடு, பெலாரஸ் அல்லது பெர்டியன்ஸ்க் துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்களை அனுப்பலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement