இந்தியாவின் பெரும்பாலான மக்களின் விருப்ப இனிப்பான ரசகுல்லாவால், பீகாரில் ரயில் சேவையே பாதித்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? பீகாரில் உள்ள லக்கிசாராய் (Lakhisarai) பகுதி ரசகுல்லாவுக்கு பெயர் பெற்றது. லக்கிசாராய் அருகே, பாரகியா (Barahiya) ரயில் நிலையம் உள்ளது. எனினும் இங்கு பெரும்பாலான ரயில்கள் நின்று செல்வதில்லை.
இதனால் தங்களது ரசகுல்லா விற்பனை பாதிக்கப்படுவதாகக்கூறி, ரசகுல்லாக்களை உற்பத்தி செய்யும் 200 கடைகளைச் சேர்ந்தவர்கள் பாரகியா ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக டெல்லி -ஹவுரா இடையேயான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
பாரகியா (Barahiya) ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், தங்கள் ரசகுல்லாவிற்கு இனிப்பான தகவல் விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டம் கைவிடப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM