மகாராஷ்டிராவில் காலியாகும் 6 ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக தரப்பில் இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் 3 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. மூன்றாவது வேட்பாளரை திரும்ப பெறும்படி கேட்டு சிவசேனா கூட்டணி தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மூன்றாவது வேட்பாளரை திரும்ப பெற்றால் சட்டமேலவை தேர்தலில் போது ஒரு இடத்தை விட்டுக்கொடுப்பதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனராம். தேவேந்திர பட்நவிஸும் நீங்கள் ஒரு வேட்பாளரை திரும்ப பெற்றால் சட்டமேலவை தேர்தலில் நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்தார்.
இதனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் போய்விட்டது. இதனையடுத்து ஆளும் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் மும்பைக்கு வரும் படி அழைத்துள்ளன. அவர்களை தேர்தல் முடியும் வரை தென்மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க ஆளும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிவிடக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சிகள் இம்முடிவை எடுத்துள்ளன. அதே சமயம் மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்துவிடவேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.
இதற்காக சுயேச்சைகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறதாம். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலும், பாஜக சார்பாக பியூஸ் கோயலும் போட்டியிடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சிவசேனா கூட்டணியால் 4 இடங்களில் வெற்றி பெறமுடியும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், “ராஜ்ய சபை தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறது. பண பலம் மற்றும் மத்திய விசாரணை ஏஜென்சியை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கின்றன. நாங்கள் இங்கு ஆட்சியில் இருக்கிறோம் என்பதை பாஜக மறந்துவிடக்கூடாது.” என்றார்.