நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும் முன்னேற்றங்களை அடைவதற்கான வழியை விரைவுபடுத்த ஃபைஸர், அண்மையில் உலகளாவிய மருந்து மேம்பாட்டு வசதியை சென்னையில் நிறுவியது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர், சென்னை மையத்தின் வாயிலாக மருத்துவமனை தயாரிப்புகள் மற்றும் புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.
இந்த மையம் 2025-ம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் 25 சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள 250-க்கும் அதிக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் உலகளாவிய சந்தைக்கான புதுமையான ஃபார்முலாக்களை மற்றும் ஏபிஐகளை (Active Pharmaceutical Ingredients) உருவாக்கப் பணிபுரிகின்றனர்.
ஒரு மருந்தின் நோய் தீர்க்கும் செயல்முறை என்பது அதன் ஃபார்முலாக்கள் மூலமாகவே அமைகிறது. ஏபிஐ என்பது செயலில் உள்ள மருந்துப் பொருளைக் குறிக்கிறது. ஃபார்முலா மற்றும் ஏபிஐ என இந்த இரண்டு முக்கிய அம்சங்களும் ஃபைஸரின் சென்னை மையத்தில் ஆய்வுசெய்யப்பட உள்ளன.
“உலகத்தரம் வாய்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயக்கப்படும் ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகம் எங்கள் பணிக்கு சிறந்த அமைப்பை வழங்குகிறது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் பிற தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா தொடக்கங்கள் கல்வி மற்றும் தொழில் கூட்டாண்மைகளை மேம்படுத்தும். ஐஐடி மெட்ரஸ் ஆராய்ச்சி பூங்காவில் உள்ள ஃபைஸரின் மருந்து மேம்பாட்டு மையம், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகவும் மேம்பட்ட ஆய்வகமாகும்.
இது இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். இந்த மையத்தின் வழியே, உலக அளவில் 2025-ம் ஆண்டுக்குள் 25 புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதோடு, ஏற்கெனவே சந்தையில் இருக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான தொழில்நுட்ப ஆதரவையும் இந்த மையம் வழங்கும். சென்னை மையத்திலுள்ள குழு, இன்னும் பல உற்பத்தி மையங்கள் மற்றும் கூட்டாளர்களுடன் நெருக்கமாக இணைந்து, மருத்துவத் துறையினருக்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்கும்.
தொழில்நுட்பம், தரம் மற்றும் பாதுகாப்பு அளவுருக்களை மனத்தில் கொண்டு உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தவும் உதவும். சென்னை மையத்தில் உருவாக்கப்படும் தயாரிப்புகள், விசாகப்பட்டினத்தில் உள்ள ஃபைஸர் மையம், அகமதாபாத்தில் உள்ள கூட்டு நிறுவன வசதி மற்றும் ஃபைஸர் உற்பத்திப் பங்காளிகள் உட்பட தயாரிப்புத் தேவைகளைப் பொறுத்து, ஃபைஸர் நெட்வொர்க்கில் உலகெங்கிலும் உள்ள உற்பத்தி வசதிகளுக்கு அனுப்பப்படலாம்.
மருந்து அறிவியல் (PharmSci), குளோபல் டெக்னாலஜி மற்றும் இன்ஜினீயரிங் (GT & E) சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகிய ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் கீழ் இந்த மையம் இரண்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. நோய்த்தொற்று எதிர்ப்பு, ஆன்கோலிடிக்ஸ், குழந்தையின்மை ஊசி மருந்துகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக மருந்து அறிவியல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
குளோபல் டெக்னாலஜி மற்றும் இன்ஜினீயரிங் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் பிரிவானது செயலில் உள்ள மருந்துப் பொருள்கள் செயல்முறை உருவாக்கம் அளிப்பதோடு, உற்பத்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க உள்ளது’’ என்று ஃபைஸர் இந்தியாவின் மேலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறுகிறார்.
புதிய மருந்துகளைச் சந்தைக்குக் கொண்டு வருவது நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையாகும். அதற்காக பலகட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும். உலகச் சந்தைகளுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், உலகெங்கிலும் உள்ள அதன் உற்பத்தி அலகுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஃபைஸருக்கு ஆசியாவின் முதல் மற்றும் ஒரே வசதியான சென்னை மையத்தில் அந்த வேலைகளில் பெரும்பகுதி செய்யப்படவிருக்கிறது.
ஃபைஸரின் உலகளாவிய மருந்து மேம்பாட்டுக்கான சென்னை மையம் 61,000 சதுர அடி பரப்பளவில், 10 ஆய்வகங்கள், பணிநிலையங்கள் மற்றும் மாநாட்டு அறைகளைக் கொண்டுள்ளது. இந்த வசதியின் திறன்களில் சிக்கலான, மதிப்பு கூட்டப்பட்ட ஃபார்முலாக்கள், கட்டுப்படுத்தப்பட்ட-வெளியீட்டு டோஸ் படிவங்கள், சாதன கலவை தயாரிப்புகள்,
லியோபிலிஸ் செய்யப்பட்ட ஊசிகள், தூள் நிரப்புப் பொருள்கள் போன்ற வேறுபட்ட தயாரிப்புகளின் செயலில் உள்ள மருந்துப் பொருள்கள் (ஏபிஐ) மற்றும் முடிக்கப்பட்ட அளவு வடிவங்கள் (finished dosage form) ஆகியவை இடம்பெறுகின்றன. 12 உலகளாவிய மையங்களின் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இயங்கும் இந்த மையத்தில், ஃபைஸர் $20 மில்லியன் (ரூ.150 கோடி) முதலீடு செய்துள்ளது.
இந்த மையத்தில் ஃபார்முலேஷன் விஞ்ஞானிகள் மற்றும் மருந்தாளுநர்கள், பகுப்பாய்வு மற்றும் உருவாக்க மருத்துவ அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற பகுப்பாய்வு விஞ்ஞானிகள், வாழ்க்கை அறிவியல் நிபுணர்கள், ரசாயன பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் நிரல் மேலாளர்கள் உட்பட பல்வேறு அறிவியல் துறைகளைச் சேர்ந்த 250 விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள்.
“ஐஐடி-மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவுக்கு ஃபைஸரின் உலகளாவிய மருந்து மேம்பாட்டு மையத்தை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஐஐடி-எம் மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பிற முன்னணி தொழில்துறை தொடக்க நிறுவனங்களுக்கு ஃபைஸர் அருகில் இருப்பது தொழில் மற்றும் கல்வியாளர்களிடையே சிறந்த ஒத்துழைப்பை வளர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று ஐஐடி-எம் ஆராய்ச்சி பூங்கா தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறுகிறார்.
“மருந்து வளர்ச்சி என்பது மருத்துவத்துக்கான மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குமுறைகளுடன் கூடிய செயல்முறையைச் சீரமைப்பது மருந்து வளர்ச்சியின் செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, தரத்தையும் மேம்படுத்தும்’’ என்கிறார் ஐஐடி-எம் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி.
இந்த மையத்தின் செயல்பாடுகளின் விளைவாக உலகளாவிய அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளில் பல்வேறு ஆரோக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி, மருந்துத் தொழில்நுட்பத் துறையிலும் சென்னை உலகளாவிய அளவில் தலைநிமிர்ந்து காணப்படும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டமே!
– சஹானா