புனே: விவசாயம், கட்டுமானத்திலும் எத்தனாலை பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், பெட்ரோல், டீசலின் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒன்றிய அரசு பல லட்சம் கோடியை செலவிட்டு வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதால், வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கட்டுமானம், விவசாயத் துறைகளில் பயன்படுத்தப்படும் சாதனைங்கள், வாகனங்களிலும் எத்தனால் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடந்த, ‘மாநில சர்க்கரை மாநாடு- 2022’ நிகழ்ச்சியில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாது: எரிசக்தி, மின்சாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாடு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தேவை ரூ.25 லட்சம் கோடியாக உயரும். இதனால், கடுமையான பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் பேருந்துகளுக்குப் பிறகு, விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் கிடைக்கும். இவற்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளேன். டீசல் அடிப்படையிலான விவசாய உபகரணங்களை பெட்ரோலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்க வேண்டும். எத்தனாலில் இயங்கும் வகையில் இன்ஜின்களை மாற்றலாம். கட்டுமானம் மற்றும் விவசாய உபகரணங்களில் எத்தனாலை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் சர்க்கரை தேவை அதிகரிப்பது தற்காலிகமானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, கரும்பில் இருந்து எத்தனாலை உற்பத்தி செய்து பிரேசில் நாடு பயன்படுத்துகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பிரேசில் சர்க்கரையை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.