புதுடெல்லி: கடந்த 2011- ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. உச்ச நீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார்த்தியை கைது செய்ய சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் 3-ம் தேதி வரை தடை விதித்திருந்தது. இதனிடையே, இதே முறைகேடு தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலும் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இம்மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.