உத்தர பிரதேச மாநிலத்தில், ரசாயன தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில், 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதை அடுத்து, தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல மணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் சில தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை முடுக்கி விட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.