ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எம்எல்ஏ மகன் உட்பட 5 சிறுவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 17 வயது சிறுமி பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றபோது சில சிறுவர்கள், சிறுமியை அணுகி உள்ளனர். காரில் வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்வதாக சிறுமியிடம் உறுதியளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களோடு அந்த சிறுமி காரில் சென்றார். ஆனால் செல்லும் வழியில் காரில் இருந்த 5 சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி உண்மையை கூறினார்.
வழக்கு பதிவு
இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, ஹைதராபாத் ஹூப்ளிஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெண் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன்பேரில் 5 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சிறுவன், எம்எல்ஏ ஒருவரின் மகன் என்பதும், மற்றொரு சிறுவன், சிறுபான்மை ஆணைய தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விருந்து நடைபெற்ற விடுதி ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.