19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் இம்மாதம் ஆரம்பம்
19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்ட இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இப்போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அஸ்கிரிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய ஐந்து அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
ரஞ்சித் மதுரசிங்க தலைமையிலான கனிஷ்ட தேர்வுக் குழுவினால் ஒவ்வொரு அணிகளுக்கும் வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 13 வீரர்கள் மற்றும் இரண்டு மேலதிக வீரர்கள் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டித் தொடரில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.