எனக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகின்றன. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவருமே மிடில் க்ளாஸ் குடும்பம். பெற்றோர் பார்த்துவைத்த திருமணம். சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
திருமணமாகி ஒரு மாதத்துக்குப் பிறகுதான், என் கணவருக்கு நிறைய கடன் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. வங்கியில் பெர்சனல் லோன், வட்டிக்குக் கடன், உறவினர்களிடம் வட்டியில்லாத கடன் என கிட்டத்தட்ட 20 லட்சம் கடனில் இருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 60% இ.எம்.ஐக்கும், வட்டிக்கும் கட்டிவிடுகிறார். திருமணமான புதிதில், ‘நான் ஒரு பிசினஸ் செய்ய நினைச்சு, பணம் அதுல லாக் ஆகிடுச்சு. அதனால நிறைய வட்டி கட்ட வேண்டியது இருக்கு. கொஞ்ச நாளைக்கு நீ உன் சம்பளத்தில் குடும்பத்தை பார்த்துக்கோ. என் பிரச்னை சரி ஆனதும் நான் பார்த்துக்குறேன்’ என்றார். நானும் அவர் சொல்லியதை நம்பி, வீட்டு செலவுகளை பார்த்துக்கொண்டேன். மாமனார், மாமியார் தனி வீட்டில் வசிக்கிறார்கள், அவர்கள் எங்களிடம் பணம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.
நாள்கள் செல்லச் செல்ல, அவர் தொழிலில் எல்லாம் எந்தப் பணத்தையும் முதலீடு செய்யவில்லை, அனைத்தும் கடன் என்பது எனக்குத் தெரிய வந்தது. அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, முதலில் மறுத்தவர், பின்னர் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ஆனால், எதற்காக கடன் வாங்கினார், ஏன் இவ்வளவு கடன் ஆகியது என்ற காரணங்களை இன்றுவரை அவர் என்னிடம் உண்மையுடனும், வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்ளவில்லை. எனக்கு, அவருக்கு ஏன் இவ்வளவு கடன் ஏற்பட்டது என்ற காரணத்தை ஊகிக்க முடியவில்லை. என் மாமனார், மாமியாரிடம் கேட்டால், ‘அவனுக்கு 20 லட்சம் கடன் இருக்கிறதா? எங்களுக்கு எதுவும் தெரியாதே…’ என்கிறார்கள். ஆனால், ஏதோ குடும்பப் பிரச்னையில்தான் இவர் கடனாளி ஆகியிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேஎன். அதைப் பற்றி அந்தக் குடும்பம் என்னிடம் பகிர தயங்குவதால், அதில் வேறு என்ன பிரச்னைகள் உள்ளதோ என்றும் என் மனம் குழம்புகிறது.
இந்நிலையில், எனக்கும் என் கணவருக்கும் இந்தக் கடன் தொடர்பாக நிறைய பிரச்னைகள் வர ஆரம்பித்தன. கணவர் கடனை தன் கடனாக நினைத்து, இருவரும் சேர்ந்து அதை அடைக்க வேண்டும் என்ற அறிவுரையை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐந்து மாதங்களாகத்தான் இவர் எனக்குக் கணவர். அதற்கு முன் இவர் யாரோ, நான் யாரோதானே? மேலும், நேர்மையானவராக இருந்திருந்தால், திருமணத்துக்கு முன்னரே தன் கடன் பிரச்னைகள் பற்றியெல்லாம் அவர் என்னிடம் பகிர்ந்து, ‘உன்னால் எனக்கு இதில் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தாலாவது, அவர் நேர்மைக்காகவே அவர் மீது மரியாதை ஏற்பட்டிருக்கலாம்; ஒருவேளை நானும் அதற்கு சம்மதித்திருக்கலாம்.
ஆனால், கடனை மறைத்து என்னை திருமணம் செய்து, இப்போது என்னுடைய பத்தாண்டு உழைப்பை, அதிலிருந்து சேமிக்க ஒதுக்க வேண்டிய பணத்தை கடனை கட்டி முடிக்கவே செலவிடும் நிலைக்கு என்னை ஆளாக்கியிருக்கும் இவரை, கல்லானாலும் கணவர் என்று நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
இதுவே, நான் 20 லட்சம் கடனில் இருந்து, அதற்கான காரணத்தையும் தெரிவிக்காமல், ‘அடுத்த பத்தாண்டுகளில் நம் உழைப்பை எல்லாம் இதற்கு செலவிட்டு, இருவரும் சேர்ந்து இதை அடைத்துவிடலாம் வாருங்கள்’ என்று நான் என் கணவரிடம் சொல்லியிருந்தால், என்னை ஏற்றிருப்பாரா? இந்த நியாயத்தை எல்லாம் கேட்டால், கோபக்காரி என்று எனக்குப் பட்டம் கட்டுகிறார்.
என்ன முடிவெடுக்க வேண்டும் நான்?