Doctor Vikatan: மூக்கிலிருந்து வடியும் ரத்தம்… பயப்பட வேண்டிய பிரச்னையா?

எனக்கு இரண்டு மகன்கள். முதல் மகனுக்கு 12 வயதாகிறது. அவனுக்கு 5 வயதில் இருந்தே மூக்கில் திடீரென்று ரத்தம் வரும் பிரச்னை இருக்கிறது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு வருகிறது. காய்ச்சல் வந்தால் சில நேரங்களில் ரத்தம் வருகிறது. இரண்டாவது மகனுக்கு 7 வயது. அவனுக்கும் அவனுடைய 5 வயதில் ஒரு முறை மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. வலி எதுவும் இல்லை. 3 முதல் 5 நிமிடங்களுக்கு இந்த ரத்தக் கசிவு இருக்கிறது. என் கணவர் வீட்டில் ஒரு குழந்தைக்கும் இதே பிரச்னை உள்ளது. இதன் காரணம் அறிய விரும்புகிறேன். இது பயப்பட வேண்டிய பிரச்னையா?

அனித ப்ரீத்தி (விகடன் இணையதளத்திலிருந்து…)

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

உங்கள் கேள்வியில் பிரச்னை குறித்த முழுமையான விவரங்கள் இல்லை. அதாவது இரண்டு குழந்தைகளுக்கும் மூக்கின் இரண்டு துவாரங்களில் இருந்தும் ரத்தம் வருகிறதா, ஒரு துவாரத்திலிருந்து மட்டுமா அல்லது இரண்டிலும் மாறி மாறி வருகிறதா என்று குறிப்பிடவில்லை.

காய்ச்சல் வரும்போது ரத்தம் வருவதாகக் குறிப்பிட்டிருப்பது சில குழந்தைகள் விஷயத்தில் சகஜமாக நடக்கும். அதாவது காய்ச்சல் வந்து சளிப்பிடித்திருக்கும் நிலையில் சில குழந்தைகள் மூக்கை நோண்டுவதால் இப்படி வரலாம். ஏனெனில் மூக்கு துவாரங்களில் உள்ளவை மிக மெல்லிய ரத்தக்குழாய்கள்.

அந்த ரத்தக்குழாய்கள் தாக்கப்படும்போது அதன் விளைவாக ரத்தம் வரலாம். அதே மாதிரி நம் உடலில் நீர்ச்சத்து குறையும் ‘டீஹைட்ரேஷன்’ நிலை ஏற்பட்டாலும் மூக்கிலிருந்து ரத்தம் வரலாம். கெமிக்கல் பயன்பாடு, அலர்ஜி, மூக்கில் அடிபடுவது, மூக்கினுள் ஏதோ அந்நியப் பொருள் சிக்கிக்கொள்வது போன்ற காரணங்களாலும் மூக்கிலிருந்து ரத்தம் வரலாம்.

மூக்கில் ரத்தம் கசிவது ஏன்?

உங்கள் கணவர் வழியிலும் ஒரு குழந்தைக்கு இதே பிரச்னை இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். Hereditary Hemorrhagic Telangiectasia (HHT) என்றொரு பாதிப்பு உண்டு. ஒரு வேளை இந்தப் பிரச்னை இருந்தால் மூக்கில் ரத்தம் வடிவது பரம்பரையாகத் தொடரக்கூடும். மற்றபடி இதில் பயப்பட ஒன்றுமில்லை.

அடிக்கடி இப்படி ரத்தம் வந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். எப்போதாவது வருகிறது என்றால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. எதற்கும் இ.என்.டி மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.