விக்ரம் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ்குமார் அப்படம் குறித்தான தன் அனுபவங்களை சினிமா விகடன் நேயர்களுக்குப் பகிர்ந்துள்ளார். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கத்தி, துப்பாக்கிகளின் வகைகள் பற்றிய பல்வேறு சுவாராஸ்ய தகவல்கள் அடங்கிய அந்த நேர்காணலின் சிறு பகுதி இதோ…
படத்தில் என்னென்ன துப்பாக்கி மாடல்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள்?
“மெஷின் கன்ஸ், சிங்கிள் பேரல், டபுள் பேரல் பிஸ்டல்ஸ் எனப் பல்வேறு வகையான துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளோம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் துப்பாக்கிகள்மீது அலாதி பிரியம் கொண்டவர். ஒவ்வொரு துப்பாக்கியின் நுணுக்கங்களையும் நன்கு அறிந்திருப்பார். செல்லும் இடத்தில் ஒரு துப்பாக்கியைப் பார்த்தால்கூட அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்பார். துப்பாக்கிக்கான உரிமம்கூட வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். துப்பாக்கியின் அனைத்து மாடல்களையும் டீட்டைலாக அறிந்து வைத்திருப்பார். ஒரு துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதுகூட அவருக்கு நுணுக்கமாகத் தெரியும்.”
இந்தத் துப்பாக்கிகளில் பயங்கரத் தாக்கம் கொடுக்கும் துப்பாக்கி என்றால் அது எது?
“M416 தான்!
இந்தத் துப்பாக்கி முதலில் கிடைக்கவில்லை. பிறகு கமல் சார்தான் கொடுத்தார். அவரது குடோனில் இல்லாத பொருளே இல்லை. அவ்வளவு பொருள்கள் இருக்கும். ‘ஷூட்டிங்கின்போது இவ்வளவுதான் இருக்கா, ஏதாவது தேவைப்படுகிறதா?’ என்று இயக்குநரிடம் கேட்டார். அப்போது இந்தந்த துப்பாக்கிகள் வேண்டும் என்று லோகேஷ் கூறினார். ஒரு மணி நேரத்தில் அனைத்தும் வந்துவிட்டன. அனைத்தும் ஒரிஜினல் துப்பாக்கிகள். செலக்டிவாக வாங்கி சேகரித்து வைத்துள்ளார். அதை பார்த்து நாங்கள் போட்டோ எடுத்து மாடல் செய்தோம்.”
‘விக்ரம்’ படத்துக்கான ஆர்ட் டைரக்ஷனில் என்னென்ன சவால்கள் இருந்தன?
“ஆர்ட் டைரக்ஷனை பொருத்தவரை மக்கள் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பார்ப்பது ஒரிஜினல்தான் என்று நம்பிவிடுவார்கள். ஆனால் ஒரு ஆர்ட் டைரக்டரின் வேலையே மக்களின் பார்வையில் அதை ஒரிஜினலாக காட்டவேண்டும் என்பதே! அது போலி என்று தெரியக்கூடாது. ஒரு கலை இயக்குநரின் பணி என்பது டம்மியான விஷயங்கள் செய்வது, ஒரு சண்டை காட்சியின்போது அடிக்கும்போது என்னென்ன பொருள்கள் கீழே விழவேண்டும், எதெல்லாம் விழக்கூடாது, விழுந்தால் நடிப்பவர்களுக்கு அடி படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் உட்பட, அந்த இடத்தின் பின்னால் என்ன பேக்டிராப் இருக்க வேண்டும் என்பது வரை அனைத்தையும் சரியாகச் செய்வதே! மேலும் ஆர்ட் டைரக்டரின் முக்கிய பணி, இருக்கும் இடத்தில் உள்ள பொருள்களை மாற்றி வைத்து உடனடியாக பிரேமுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டியிருக்கும். சில இடங்களில் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டியது இருக்கும். இது மிகவும் கடினமான ஒரு பணி.”
சண்டைக்காட்சியில் கமல் சார் பயன்படுத்திய அந்த டபுள் பிஸ்டல் குறித்து சொல்லுங்கள்…
“பிஸ்டல், வெப்லீ ரிவால்வர் இவையெல்லாம் ஒரிஜினலாக வேண்டும். டம்மி நிறைய பார்த்தோம். ஆனால் அதுவும் சரிப்படவில்லை. ஒரிஜினல் வேண்டும் என்று கூறியதால் 3டி பிரிண்டிங் போட்டு இதை பயன்படுத்தினோம். எந்த மாதிரியான துப்பாக்கி பயன்படுத்த வேண்டும், அது எவ்வளவு தூரம் ஃபயர் ஆகும் என்பது வரை பிளான் போட்டு வைத்திருப்பார் இயக்குநர்.”
படத்தில் அனைவரும் துப்பாக்கியைக் கவனித்து இருப்பார்கள், ஆனால் கத்தியும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பொருள். அதைப்பற்றி கூறுங்கள்…
“கத்தியின் பெயர் கட்டானா… இதை டீசரிலும் பயன்படுத்தியிருப்போம். அதே வேண்டும் என்று ஆர்டர் செய்து வாங்கினோம். இந்தக் கத்தி விக்ரமின் ஒரு பார்ட் என்றே கூறலாம்.”
“‘கைதி’ படத்தின் இறுதிக்காட்சியில் பயன்படுத்தியுள்ள துப்பாக்கியின் ஒரிஜினல் எவ்வளவு எடை? நீங்கள் செய்த டம்மி எவ்வளவு எடை இருக்கும்?”
“அப்போது ஒரிஜினல் துப்பாக்கி கிடைக்காது என்று கூறிவிட்டார்கள். மும்பையிலிருந்து மாடல் ஒன்றை வாங்கி இருந்தோம். அதை ஒரிஜினல் போலவேதான் ரெடி செய்தோம். நாங்கள் பயன்படுத்தியது சுமார் 15 கிலோ எடை இருக்கும். ஆனால், ஒரிஜினல் துப்பாக்கி இதைவிட மிக அதிகமாக இருக்கும். ஏனெனில் சாலிட் மெட்டலுக்கும், மெட்டல் ஷீட்டிற்க்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா!”
அதே படத்தில் ஜெயில் செட் போட்டு இருப்பீர்கள். அதை உருவாக்க எத்தனை நாள்களானது?
“அந்த இடம் 60க்கு 120 அடி. எப்பவுமே எனக்கு நேரம் அதிகம் தரமாட்டார்கள். அவசரமாகதான் வேலை செய்வோம். அது இரண்டாம் உலகப் போரின் போது பயன்பாட்டில் இருந்த ஜெயில். அந்த ஜெயிலுக்கான ரெஃபரன்ஸ் தேடினோம். ஜெயில் கம்பிகள் எப்படி இருந்தன என்பதை ஆராய்ச்சி செய்யவும், சுவரின் கல்தூண், போகும் வழித்தடம்; இவை எல்லாம் பழைமையானதாக இருக்க வேண்டும் என்பதே மெனக்கெடல். இதற்கெல்லாம் மொத்தம் மூன்று நாள்கள் போல ஆகின.”
‘விக்ரம்’ படத்தின் அனுபவம் குறித்து கூறுங்கள்…
இந்த படம் போல மறுபடியும் ஒரு படத்தில் நான் வேலை செய்வேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்தப் படம் பயங்கரமான ஒரு அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். இப்போ என்னவாக இருக்கும் நிலை ஆகிவிட்டது என்றால்… கமல் சார் சொல்வார் அல்லவா ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று, அது மாதிரி எந்தப் படம் வேண்டுமானாலும் பண்ணலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இதுவே பார்த்துவிட்டோம் இதற்கு மேல் என்ன அப்படி ஆகிவிட்டது. அவ்வளவு அனுபவங்களை பெற்று உள்ளேன்.”