பணியாற்றும் வங்கியில் பொதுமக்களின் நகைகளை பெண் மேலாளர் ஒருவர் திட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது.
திருப்பதியின் காளஹஸ்தியில் இயங்கி வருகிறது ஃபின்கேர் என்ற தனியார் வங்கி. அங்கு கடந்த மே 26-ம் தேதி இரவு தன்னை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றதாக போலீசில் வங்கியின் ஆபரேஷ்னல் மேனேஜரான ஸ்ரவந்தி என்ற பெண் புகார் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளை சம்பவம் குறித்து திருப்பதி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளையடிக்கப்பட்ட வங்கியின் சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க் காணாமல் போயிருக்கிறது.
இதனால் புகாரளித்த அந்த பெண் மேலாளர் பக்கம் போலீசின் சந்தேகம் திரும்பியதை அடுத்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் விவரம் வெளி வந்திருக்கிறது.
அதில், சுமார் 4 ஆண்டுகளாக ஃபின்கேர் வங்கியில் ஆபரேஷ்னல் மேனேஜராக இருக்கும் ஸ்ரவந்தி நகைக்கடனுக்காக மக்கள் அடகு வைத்த நகையையும், பணத்தையும் தனது நண்பர்களின் உதவியோடு கொள்ளையடித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியுள்ள திருப்பதி போலீசார், 1 கிலோ மதிப்புள்ள அடகு வைக்கப்பட்ட நகைகளும், கொஞ்சம் பணமும் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மூளையாக மேலாளர் ஸ்ரவந்தி செயல்பட்டிருக்கிறார்.
அவரது நண்பர்களான நவீன், சுல்தான் முகமது, விஜய்குமார், முகமது ஹுசைன், ஜெகதீஷ் குமார், ஆண்டனி ராஜ் மற்றும் வருண் ஆகியோர் இதில் தொடர்புடையவர்கள். சம்பவம் நடந்த அன்று இரவு வங்கிக்குள் மர்ம நபர்களை போன்று நுழைந்தவர்கள் ஸ்ரவந்தியை கட்டிப்போட்டு நகை, பணத்தை சுருட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1274 கிராம் தங்க நகைகளையும், 3.5 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து அனைவரையும் கூண்டோடு கைது செய்திருப்பதாகவும் மாவட்ட எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
வங்கியில் பணியாற்றும் மேலாளரே இப்படியான நாடகத்தை நடத்தி கொள்ளையடிக்க செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஃபின்கேர் வங்கி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Also read: டன்ஸோவை வாங்கி டோர் டெலிவரி பணியில் இறங்குகிறதா ரிலையன்ஸ் ரீடெயில்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM