அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் பால், நெய், வெண்ணெய், தயிா் போன்ற பலவிதமான பால் உப பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா்.
இதனால், சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் நாள்தோறும் பணம் கொடுத்து பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் எல்லாம் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆவில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அரை லிட்டர் தயிர் விலை ரூ.27 இல் இருந்து ரூ.30 ஆகவும், ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை ரூ. 515 இல் இருந்து ரூ.535 ஆகவும் உயர்த்தப்பட்டன. இதனைக் கண்டித்து அறிவித்ததோடு, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுமட்டுமல்லாமல், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் தற்போது ஆவின் பூத்துகளில் கிடைப்பதில்லை. 1 கிலோ நெய் தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. சிறிய அளவிலான பால்கோவா பெரும்பாலான ஆவின் பாலகங்களில் கிடைப்பதில்லை.
பால் விற்பனையின் அளவு சென்ற ஆண்டை விட தற்போது உயா்ந்திருக்கிறது என்று கூறி, இந்தக் குற்றச்சாட்டினை அரசு மறுக்கலாம். ஆனால், நுகா்வோா்களின் எண்ணிக்கை அதனை விட உயா்ந்துவிட்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆவின் பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இந்தக் கோரிக்கையினை பூர்த்தி செ்யய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, ஆவின் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.