இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உரம் இன்னும் சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள விடயம்
இந்தியா தனது உரத் தேவையை ஓமான் நாட்டிலிருந்தே பெற்றுக் கொள்வதாகவும், அந்த வகையில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த உரம் ஓமான் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்டு கப்பல் மூலம் நேரடியாக இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அந்தக் கப்பல் இலங்கைக்கு வந்து சேரக்கூடும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள கால்நடை வளர்ப்பு தொழில்துறையை மேம்படுத்தவும் உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தமட்டில் சூரியகாந்தி பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழல் காணப்படுவதாகவும், சூரிய காந்தி எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையில் பெரும் கிராக்கி இருப்பதால் அதனைப் பயிரிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்திய ஒத்தாசைகளைப் பெற்றுத் தருவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.