கொழும்பு, : இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் அளிக்கும் 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, அனைத்து அதிகாரங்களும் அதிபர் வசம் வரும் வகையில், 20ஏ என்ற சட்ட திருத்தத்தை மேற்கொண்டார்.இந்நிலையில், அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை அடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
அந்த வகையில், அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன.இது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்து, தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 21வது சட்ட திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.
‘இரண்டு வேளை உணவு தான்’
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது: இலங்கை பொருளாதார சிக்கலை தீர்க்க பல நாடுகளிடம் உதவி கேட்டுள்ளோம். நாட்டை சீரமைக்க நிதி மற்றும் கடன் உதவி கிடைக்காவிட்டால், இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறிதான். உரம் இருப்பு இல்லாததால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. அக்டோபர் வரை உணவுப் பொருட்களை சப்ளை செய்ய முடியும். அதன்பின் நிலைமை இன்னும் மோசமடையும். மக்கள் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement