நீதி மன்றிள் உத்தரவுக்கு அமைய தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் SU-289 தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதே நேரத்தில் வழக்கமான இராஜதந்திர வழிகள் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறுகிறது.
உறுதியை மீறி தடுத்த வைக்கப்பட்டுள்ள விமானம்
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி வரை குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் ரஷ்ய விமானங்கள் தடுத்து வைக்கப்படாது அல்லது கைது செய்யப்பட மாட்டாது என குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய போக்குவரத்து நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த போதிலும் விமானம் தடுத்து வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகேவை அழைத்து இந்த எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விமான சேவைகளை உடனடியாக நிறுத்தம்
இதனிடையே, ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம், இலங்கைக்கான விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு வர்த்தக விமானங்களை இயக்க மாட்டோம் எனவும் இலங்கைக்கான பயணத்திற்கு விமான டிக்கெட்டுகளை விற்க மாட்டோம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.