புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக விளங்கினார். கம்பீர் (பாஜக) கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.-யாகவும் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கம்பீரிடம் எம்.பி.-யாகவும் இருந்து கொண்டு கிரிக்கெட்டில் ஆலோசகராவும், வர்ணனையாளராகவும் செயல்படுவது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “ஐபிஎல்லில் நான் ஏன் பணியாற்றிகிறேன் என்றால், ஒவ்வொரு மாதமும் 5000 பேருக்கு உணவளிக்க நான் 25 லட்சம் ரூபாய் செலவிடுகிறேன். இது தோராயமாக ஆண்டுக்கு ரூ. 2.75 கோடி. நான் 25 லட்சம் ரூபாய் செலவழித்து ஒரு நூலகத்தை கட்டியுள்ளேன்.
இதற்காக நான் செலவு செய்யும் பணம் என்னுடைய எம்.பி தொகுதிக்கான நிதியில் இருந்து வருவது அல்ல. இதற்காக நான் செலவு செய்யும் அனைத்து பணமும் என்னுடைய சொந்த பணமாகும். பணம் பறிக்கக் கூடிய மரம் என் வீட்டில் இல்லை” என பதிலளித்தார்.