சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வெளியிடுவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று(ஜூன் 5) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் பி ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் ஊடக நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த அவர், யூடியூப் சேனல்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, திமுக அமைச்சர் ஊழல் பட்டியல் வெளியிடவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளதால், இச்சந்திப்பு முக்கியத்தவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், இதே போன்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்காத அண்ணாமலை, 200 ரூபாய் முதல் ரூ3000 வரை அறிவாலயத்தில் பெற்று கொள்ளலாம் என கையூட்டு பெறுவது போல் பேசியிருப்பார்.
பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையிலான அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.