கான்பூர்: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பாரதஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்திற்கு முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர். இதில் கான்பூரில் பயங்கர வன்முறை ஏற்பட்டது.இந்த வன்முறையில் ஒரு பிரிவினர் டயர்களை கொளுத்தி, கடைகளை அடைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீசார் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கலவரம் நடந்த இடத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை 24 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வன்முறை தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.