காயிதே மில்லத் அவர்களின் 127-ஆவது பிறந்தநாளில் அவரது தேசப்பற்றையும், தமிழ்ப் பற்றையும் போற்றுவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தேசத் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 127-ஆவது பிறந்தநாள் இன்று.
தேசத்தையும், தமிழையும் அவர் அளவுக்கு நேசித்தவர்களும், அதற்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. அவரது பிறந்தநாளில் அவரது தமிழ்ப் பற்றை போற்றுவோம்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய விடுதலைப்போராட்ட வீரர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 127-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்திய தலைவர் அவர். அவர் விரும்பிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த நாளில் உறுதியேற்போம்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.