புதுடெல்லி:அரசு திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன்னதாக, பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா எட்டி இருக்கிறது,’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று ‘மண் காப்போம் இயக்கம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:பருவநிலை மாற்றத்தில் குறைவான பங்கை கொண்டுள்ள இந்தியா, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக முயற்சிகளை மேற்கொள்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மகத்தான முன்னேற்றம் கண்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பு, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.விவசாயத் துறையில் மண் பிரச்னையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்பு, நமது நாட்டு விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது. இப்பிரச்னையை போக்க, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன்னதாக, பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா எட்டி இருக்கிறது. கடந்த 2014ல் எத்தனால் கலப்பு 1.5 சதவீதமாக இருந்தது. 10 சதவீத எத்தனால் கலப்பு, 27 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுத்துள்ளது. மேலும், ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தியுள்ளது. அதோடு, எத்தனால் கலப்படம் அதிகரிப்பதால், கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகள் ரூ.40,600 கோடி வருவாய் ஈட்டி உள்ளனர். இந்த சாதனைக்காக நாட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.இதே போல், மின் உற்பத்தித் திறனில் 40% புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்கான இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்துள்ளது. தேசிய கதிசக்தி திட்டத்தால் தளவாட அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பு பலப்படுத்தப்படும். அது சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.‘உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ (லைப்) என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘கடந்த காலங்களில் இருந்து பெற்ற அனுபவங்களை, தற்போதைய காலத்தில் செயல்படுத்த வேண்டும். இதை வைத்து எதிர்காலத்துக்காக திட்டமிட வேண்டும். ‘ ஒரே பூமி; பல முயற்சி’ என்ற சுலோகத்தின் மூலம், உலகத்தின் சுற்றுச்சூழல் நன்மைக்கு வேண்டிய உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது,’ என்றார்.7,400 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரிப்புமோடி பேசுகையில், ‘மழை நீர் சேமிப்பு போன்ற பிரசாரங்கள் மூலம் நாட்டு மக்களை நீர் பாதுகாப்புடன் இணைத்து வருகிறோம். தற்போது நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளில் 7,400 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது, வனவிலங்குகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்க வழிவகுத்துள்ளது,’ என்றும் கூறினார்.n வளர்ந்த நாடுகள் பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல், அதிகபட்ச கார்பன் வெளியேற்றத்தை தொடர்கின்றன. n உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 டன்னாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே.n இதன் மூலம், 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை எட்ட தீர்மானித்துள்ளோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.