“காஷ்மீரில் 90-களில் நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆலோசனைக் கூட்டங்களைத் தாண்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில், இன்று ஆம் ஆத்மி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீர் படுகொலைகளை கண்டித்தும், காஷ்மீரி பண்டிட்டுகளின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “காஷ்மீரில் நடைபெறும் திட்டமிட்ட படுகொலைகளைக் கண்டித்து பண்டிட் சமூகத்தினர் போராட்டம் நடத்தவிடாமல் கூட மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இது அவர்களின் துயரை இரட்டிப்பாக்குவதைத் தவிர வேறென்ன.
காஷ்மீரில் 1990-களின் நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆலோசனைகளை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். காஷ்மீருக்கு இப்போது உடனடி நடவடிக்கைகள், தீர்வுகள் தான் அவசரமாகத் தேவை.
காஷ்மீரில் நடைபெறும் திட்டமிட்ட படுகொலைகள் நிறுத்த மத்திய அரசுக்கு நாங்கள் 4 பரிந்துரைகளை முன் வைக்கிறோம்.
முதலில், திட்டமிட்ட படுகொலைகளை தடுக்க ஒரு ஆக்ஷன் ப்ளான் ஏற்படுத்துங்கள். காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீருக்கு வெளியே வேஎலை செய்ய முடியாது என்ற ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், நிம்மதியான வாழ்வுக்கு அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுங்கள்” என்று தெரிவித்தார்.
அதேபோல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தந்திரங்களை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேஜ்ரிவால் எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், “பிரதமரும், உள்துறை அமைச்சரும், மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடித்தனரே. இன்று காஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் எல்லோரும் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றனர்” என்று கேள்வி எழுப்பினார்.