மும்பை: “காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் இதுவரையில் சுமார் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் வங்கி மேலாளர், ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஊழியரும் அடக்கம். அதேபோல இதில் பலியானவர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், இஸ்லாமியர் அல்லாதோர் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் போராடி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார் ஆதித்ய தாக்கரே. “காஷ்மீர் பண்டிட்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார். அம்மக்களுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அங்கிருந்து வெளிவரும் தகவல்கள், அங்கு நிலவும் சூழல் என எதுவுமே சரியானதாக இல்லை. காஷ்மீரில் நிலவி வரும் சூழலை கண்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என தெரிவித்துள்ளார் தாக்கரே.
சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்ஜய் ராவத் இந்த விவகாரத்தில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் சூழலை கொண்டு பிரதமர் மோடி, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஊக்குவிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு பண்டிட் சமூக மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.